கனிமொழி எம்.பி. முன்னிலையில் நிலைமறந்து பேசிய திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன்…

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் நிலைமறந்து பேசிய திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பனின் பேச்சுக்கு அரங்கில் இருந்த மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

Update: 2022-11-28 09:21 GMT

புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்.பியுடன் கரு. பழனியப்பன்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் முக்கிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு பேசி வருகின்றனர். இந்த நிலையில், 27 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் சாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,  மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில், படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பேசும்போது, தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருவதாகவும், பழிவாங்கும் கொலைகள் அதிகம் நடைபெற்று வரும் தூத்துக்குடியில் இதுபோன்ற புத்தகத் திருவிழா நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும், மக்களின் தேவையை அறிந்து மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவை திமுக அரசு நடத்தி வருவதாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்தும் பேசினார். ஒரு அரசு நிர்வாகம் நடத்தும் விழா என்பதை கூட அறியாமல் பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்தும் அவர் பேசியது அரங்கில் கூடியிருந்த மக்களை முகம் சுழிக்க வைத்தது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி புத்தக வாசிப்பு அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே புத்தகத் திருவிழாவை நடத்துகிறார் என்றும் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பை தவிர்த்து தனக்கு பிடித்தவர்களையும், பிடித்த அரசியல் தலைவர்கள் குறித்தும் கரு. பழனியப்பன் நிலைமறந்து பேசியதை மக்கள் ரசிக்கவில்லை.

3 ஆவது புத்தகத் திருவிழா:

திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

தூத்துக்குடியில் முதல் முறையாக புத்தகத் திருவிழா கடந்த அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் இணைந்து நடத்தின. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே திறந்த வெளியில் நடைபெற்ற அந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின.

தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் நிர்வாகத்துடன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய இரண்டாவது புத்தகத் திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சி 9 நாட்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் திறந்தவெளியில் நடைபெற்ற அந்தத் திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏறத்தாழ ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், தினமும் கலைநிகழ்ச்சிகளும், சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஆனால், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிறந்த பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடியில் 9 நாட்கள் நடைபெற்ற இரண்டாவது புத்தகத் திருவிழாவில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவ, மாணவிகள். அவர்கள் தரப்பில் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இதுதவிர, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊராட்சி நூலகங்களுக்காக 25 லட்சம் ரூபா் மதிப்பிலான புத்தங்கள் வாங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. வஉசி துறைமுக நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டு 100 பள்ளிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது, மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சிறப்பாக செயல்பட்டு, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து வந்து பேச வைத்தார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் ஆதரவாக பேசுவோரை மட்டுமே அழைத்துபேசவைத்துள்ளனர் என்று தெரிவித்தனர். 

Tags:    

Similar News