நாளை பயன்பாட்டிற்கு வருகிறது தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம்
தூத்துக்குடியில் ரூ. 58 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் நாளை மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ. 58.67 கோடி செலவில் 13630 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் திறந்து வைத்தனர். இதையெடுத்து, பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு நாளை கொண்டு வரப்படுகிறது.
இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் வந்து போவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தரைத்தளத்தில் 29 பேருந்து நிறுத்தும் தளங்களும், 36 கடைகளும் மற்றும் கூடுதல் வசதியாக பேருந்து பயண சீட்டு முன் பதிவு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, மின் கட்டுப்பாட்டு அறை, குடிநீர் சுத்திகரிப்பு அறை மற்றும் சுகாதார அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
எங்கே செல்லக்கூடிய பேருந்து எந்த இடத்தில் நிற்கின்றது என்று பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கான அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஒரு அலுவலர் இங்கே இருப்பார். வருகின்ற பேருந்துகள் சரியான நேரத்தில் பயணிகள் ஏற்றிக்கொண்டு போகிறதா? என்பதை அவர் கண்காணிப்பார். பயணிகளும் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவரிடம் சென்று கேட்டுக்கொள்ளலாம். பஸ்கள் போகும் இடம் குறித்து பயணிகளுக்கு தேவையான அறிவுரைகள் கூறப்படும். இந்த பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு தளத்திலும் நவீன வசதிகளுடன் கொண்ட கழிப்பறைகள் அனைத்தும் இருக்கின்றது.
அதுபோன்று முதல் தளத்தில் 43 கடைகளும் மற்றும் இருசக்கர வாகனங்கள் 384 எண்ணம் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தில் 19 கடைகளும் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 45 எண்ணம் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் தளத்தில் 17 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் தளத்தில் உணவகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வசதியாக பேருந்து நிலைய பயணிகள் பயன்படுத்தும் வகையில் இரண்டு மின் தூக்கி (லிப்ட்) அமைக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தள வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான பாதுகாக்ககப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து தடுப்பு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஏடிஎம் வசதிகள் உள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் ஒளி தரும் வகையில் 4 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளை இறக்கி செல்ல ஆட்டோக்களுக்கு தனியாக வழி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நாளை (அக்டோபர் 11) முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர், திருநெல்வேலி பேருந்துகள் இங்கிருந்தும், சென்னை, மதுரை நெடுந்தூர பேருந்துகள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.