தூத்துக்குடி: 490 பவுன் நகைகள் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் தங்க நகைகளை அடகுவைத்து அதிக லாபம் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-11 12:54 GMT

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மதன்குமார் என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்குச் சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

தங்களிடம் 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் 10,000 ரூபாயும் சேர்த்து கொடுப்பதாகவும், மேலும் 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த 06.05.2023 அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.


இதில் மதன்குமாருக்கு 40,000 பணம் மட்டுமே கொடுத்துவிட்டு, கார் வாங்க முன்பணமும் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த 26.06.2023 அன்று கிரேனா என்வரின் வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு கேட்டதற்கு, மூன்று பேரும் சேர்ந்து மதன்குமாரிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மதன்குமார் கடந்த 01.07.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணைக்குப் பிறகு கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மூவரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேரிடம் இதேபோன்று பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டிதருவதாக கூறி 490 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News