சனாதனம் குறித்து பேசியதில் தவறு இல்லை.. திரும்ப திரும்ப பேசுவேன்: உதயநிதி ஸ்டாலின்
சனாதானம் குறித்து நான் பேசியதில் தவறில்லை என்றும் பேசக்கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடி வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிற்கு பதில் அளித்தார். சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. திராவிட இயக்கங்கலால் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது. அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன். இந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. பெண்களை அடிமைபடுத்தி கொண்டிருந்தார்கள். படிக்க அனுப்ப வில்லை. பேசக் கூடாது என்றால் திரும்ப நான் திரும்ப பேசுவேனன். நான் பேசினால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என பேசும்போதே கூறினேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறைவாரியாக வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வரும்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும் போது, மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறேன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுக் கூட்ட அறிக்கை தமிழக முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். தமிழக முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.