தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் வசூல் கிடையாது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு டிசம்பர் 31 -ம் தேதி வரை கட்டணம் விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதியில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை தன்னார்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
நிவாரணப் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் சிரமமின்றி தூத்துக்குடி மாநகரக்குள் வந்து செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 31 -ம் தேதி வரை கட்டணம் வசூலிக்க விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பிறப்பித்து உள்ளார்.