முடிவுக்கு வந்தது தூத்துக்குடி அமலிநகர் மீனவர்கள் போராட்ட நடவடிக்கை

தூத்துக்குடி அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 12 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Update: 2023-08-18 14:41 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, தூத்துக்குடி மாவட்டம் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்க ரூ. 58 கோடி ஒதுக்கியது. ஆனால் ஓராண்டாகியும் பணிகள் துவங்கவில்லை. இதையெடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 10 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து கடலில் இறங்கி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் கூடிய விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து ஆறு மாதங்கள் ஆகியும் தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அமலி நகர் மீனவர்கள் கடந்த 7 ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 12 நாட்களாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாத நிலை நீடித்தது.

இதற்கிடையே, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மீனவர்கள் நேற்று மாலை அந்தப் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.


இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர் மற்றும் அமலிநகர் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும்போது, அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரம் மாதம்தோறும் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்படும் என கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போராட்டத்தை கைவிடுவதாக மீனவ சங்கப் பிரநிதிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்ற அமலிநகர் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கூறும்போது, மாவட்ட ஆட்சியரின் வார்த்தை நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததாகவும், இதனால், போராட்டத்தை கைவிட்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் மீண்டும் கடலுக்குச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News