கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கோவில்பட்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை, கொள்ளை, வழிப்பறி, புகையிலைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 30.08.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த பொன்முத்துபாண்டியன் (30) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழிப்பறி வழக்கில் கைதான பொன்முத்துபாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி, வழிப்பறி வழக்கில் கைதான விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த பொன்முத்துபாண்டியனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 124 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.