‘அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான்’- முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் என முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.;
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத்தமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
தமிழக சட்டமன்றத்துக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் வர உள்ளது. எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் 200 தொகுதிகள் அ.தி.மு.க .கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வராக வருவார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை வெல்வதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது இல்லத்திருமண விழா அழைப்பிதழை அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் வழங்கி அழைப்பு விடுத்தார்.