தூத்துக்குடி மாவட்ட வணிகர்களுக்கு உணவு பாதுாகப்புத் துறை கடும் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது, 14 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டு, அந்தக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதை அரசு கணக்குத் தலைப்பில் இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட வணிகர்கள் செலுத்த உத்தரவிடபட்டது.
இதற்கிடையே, வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
மாவட்டத்தில் எந்தவொரு வணிகரும் தடைசெய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்படுகின்றது. முதல் முறையாக ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்தக் கடையானது 14 நாட்களுக்கும் குறைவில்லாமல் மூடி வைக்கப்படும் என்பதுடன், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.
இதுபோல், அதே வணிகரிடத்தில் இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு கடை மூடப்பட்டு, பின்னர் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். ஒரே வணிகரிடத்தில் மூன்றாவது முறையாகத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அவரது உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, கடையானது மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதுடன், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
மேலும், வணிகரிடத்தில் பதிவு சான்றிதழ் இல்லை என்றால், மேற்கூறிய அபராதத்துடன் கூடுதலாக ரூ. 5,000/- அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் வணிகர்களுக்கு எவ்விதமான கருணையும் காண்பிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.
உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு, கடையின் சேவை குறைபாடு குறித்து மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.