தூத்துக்குடி மாவட்ட ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-09-21 15:09 GMT

நாமக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி திடீரென உயிரிழந்தார். சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷவர்மா உணவகங்களில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார், சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாஸூ ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த இரண்டு தினங்களாக ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, 16 ஷவர்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, காலாவதி தேதி இல்லாத 11 கிலோ ஷவர்மா ரொட்டிகளும், சந்தேகத்திற்கிடமான 3 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், 10 கிலோ தப்புக்குறியீடான மசாலா மற்றும் சுகாதாரமற்ற வகையில் இருந்த மசாலாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

காலாவதி தேதி இல்லாத ஷவர்மா ரொட்டி தயாரித்த நிறுவனமும் ஆய்வு செய்யப்பட்டு, லேபிள் இல்லாத 4 கிலோ ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத் துறைக்குத் தவறான தகவல் வழங்கி, உரிமத்திற்குப் பதிலாக, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்ற இரண்டு ஷவர்மா கடைகளுக்கு நிறுத்த அறிவிப்பு சார்பு செய்யப்பட்டு, கடைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பரோட்டாக் கடையை ஆய்வு செய்ததில், அதன் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அதன் இயக்கத்தினை நிறுத்தி வைத்தும் நியமன அலுவலரால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரை எந்த ஷவர்மா கடையிலும் உறையவைக்கப்பட்ட சிக்கன் பயன்படுத்துவது கண்டறியப்படவில்லை என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News