தேர்தல் வாக்குறுதியில் கூறிய ரூ. 8000 எங்கே? மீனவர் சங்கம் கேள்வி
மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என அகில இந்திய மீனவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து, அகில இந்திய மீனவர் சங்க தேசியத் தலைவர் அன்டன் கோமஸ் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் இன்று தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சமர்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்பையும் மிஞ்சி,"அதிசயம் ஆனால் உண்மை" என்று வியந்து நோக்கும் வண்ணம் அமைந்து உள்ளது.
நிதிநிலை அறிக்கையின் 36 ஆவது பக்கத்தில் மீனவர் நலன் எனும் தலைப்பில் 66 ஆவது பத்தியில், கடந்த ஆட்சியில் மீன்பிடி குறைவு கால நிவாரணமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. நாங்கள் சென்ற வருடம் 6000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தோம்.
இந்த ஆண்டு எதுவும் உயர்த்தாமல், கடந்த ஆண்டு கொடுத்தது போல், அதே தொகையை மீன்பிடி குறைவு காலம், தடைக்காலம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணங்கள் 4.3 லட்சம் மீனவருக்கு வழங்கப்படுகிறது. ஒரு மீனவருக்கான மொத்த நிவாரண தொகையையும் கூட்டி, 4.3 லட்சத்தால்பெருக்கி 389 கோடி ரூபாய் புதிதாக ஒதுக்கி இருப்பதாக பொய்யான மாயத் தோற்றம் உருவாக்கப் பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் இந்தத் தொகை ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர, 37 ஆம் பக்கம் 67 ஆம் பத்தியில் மீன் வளத்தை பெருக்க செயற்கை பவளப் பாறை அமைக்க திட்டம் எனும் மோசடியான ஒரு வார்த்தை உள்ளது.
மீனவர்களின் கதறலுக்கு செவி மடுக்காமல், சேது கால்வாய் தோண்டி பவளப்பாறைகளை உடைத்தவர்கள், இன்னும் சேது கால்வாயை கொண்டு வந்து ஒட்டு மொத்த பவளப்பாறைகளையும் அழிக்க துடிப்பவர்கள் யார்? என உலகம் அறியும்.
பவளப் பாறைகள் ஆண்டுக்கு கால் இஞ்ச் கூட வளராத அரிய வகை உயிர்பாறை. அதன் இழப்பு ஈடு செய்ய முடியாததாக வர்ணிக்கப்படுகிறது. செயற்கை பவளப் பாறை கடலுக்கு ஆக்ஸிஜன் தராது. நுண்ணுயிர்களை காக்காது. இயற்க்கையை அழித்து, செயற்கையை உருவாக்குவோம் என்பது வேடிக்கை ஆகும்.
பாக் ஜலசந்தியில் 3 மாவட்டங்களில் 79 கோடியில் 217 செயற்கை பவள பாறைகளும், மற்ற மாவட்டங்களில் 64 கோடியில் 200 செயற்கை பவளப் பாறைகளும் அமைப்பதாக, மீனவனுக்கும் கடலுக்கும் பயன்படாத, அரசியல் வாதிகளின் நலன் சார்ந்து திட்டம் வரையப்பட்டு உள்ளது.
இதுதவிர, வேறு எந்தத் திட்டமும் மீனவர் நலனில் குறிப்பிடவில்லை. மேலும், 37 மற்றும் 38 ஆவது பக்கங்களில், சுற்றுச் சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றம் தலைப்பில் 68 ஆவது பத்தியில் கடலின் பன்முகதன்மை சூழல், கடலரிப்பு ஆகியவற்றை தடுக்க 2000 கோடியில் புதிய "நெய்தல் மீட்சி" எனும் திட்டம் உலக வங்கியின் உதவியுடன் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இது கடல் அரிப்பால் தூண்டில் வளைவு கேட்டு போராடும் மீனவர்களை ஏமாற்ற என்பது புரிகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மீனவனுக்கு உள்ளது இவ்வளவு தான். ஏகாதிபத்திய நாடுகளில், நிதி மேலாண்மை பயின்ற அமைச்சரின் பட்ஜெட் ஏகாதிபத்தியத்தை பிரதிபலிப்பதில் ஆச்சரியமில்லை.
மீனவர் கோரிக்கைகளாக தேர்தல் அறிக்கையில் சொன்னது போக பல கோரிக்கைகள் ஆண்டாண்டுகளாக கோரிக்கைகளாகவே நீடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி விட்டோம் என்று கூறும் அரசு மீனவர்களுக்கு எதை நிறைவேற்றினார்கள்.
தேர்தலை முன்னிட்டு வரி இல்லாத (மெய்டன்) பட்ஜெட் என்பார்கள். ஆனால், மீனவனுக்கு எந்த புதியத் திட்டமும் இல்லாத (மெய்டன்) பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என அன்டன் கோமஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.