தூத்துக்குடியில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்: விருது பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.;

Update: 2023-10-14 12:42 GMT

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினிக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் விருது வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறையின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதத்தில் அடுத்த முறை முதல் இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில் தூத்துக்குடியை பற்றி எந்தவிதமான புகாரும் இதுவரை வந்தது கிடையாது. தூத்துக்குடிக்கு என்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு.

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாறுதல் வழக்கமான ஒன்றுதான். அரசு பணியில் பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்தான். அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் பணியாற்றுவதற்குதான் அரசு பணிக்கு வந்திருக்கிறோம்.

ஆசிரியர்கள் வகுப்பறையாக இருந்தாலும் சரி, தேர்தல் பணியாக இருந்தாலும் சரி எந்தவொரு சிரமம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள். எனக்கு எனது தாயாருடன்; பள்ளிக்கு சிறு வயதில் சென்றபோது அங்குள்ள ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களை பார்த்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.

அப்போது நான் முதன்மை கல்வி அலுவலராக வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தபோது ஆசிரியர் என்னை மருத்துவராக வேண்டும் என்று நம்பிக்கையை தந்தார். அதன்படியே நான் மருத்துவர் ஆனேன். பின்னர் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியர் ஆனேன்.

சின்ன சின்ன விஷயங்கள் மாணவ, மாணவிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். மாணவ, மாணவியர்கள் எல்லோரும் ஆசிரியர்களுக்கு மரியாதை தர வேண்டும். நீங்கள் என்ன யோசிக்க வேண்டும் என்பதைவிட எப்படி யோசிக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் நிறைய விளையாட வேண்டும்.

பள்ளிகளில் ஏதேனும் குறைகள் இருக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆகையால் ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைப் பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை மாவட்டமாக கொண்டுவர அயராது பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினிக்கும், தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் குருநாதன், கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் ஆகியோருக்கும் நல் ஆளுமை விருதுகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

மேலும், மாநில நல்லாசிரியர் விருதுபெற்ற 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகளையும், 12 சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற 67 பள்ளிகளின் 550 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் கற்றுத்தரும் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் அதிகமாக பெறவைத்த 36 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி) குருநாதன் (தூத்துக்குடி), ஜெயபிரகாஷ்ராஜன் (கோவில்பட்டி), வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேகர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News