உயர்கல்வியில் 50 சதவீத வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது: கனிமொழி எம்.பி. பேச்சு
கிராமப்புறங்களிலும் கல்லூரிகளை கொண்டு வந்ததால்தான், 30 ஆண்டுகள் கழித்து உயர்கல்வியில் 50 சதவீதம் வளர்ச்சி என்ற இந்தியாவின் இலக்கினை இன்றே தமிழ்நாடு எட்டியிருக்கிறது என, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளை மூலமாக ரூ. 2.92 கோடி மற்றும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி மூலமாக ரூ. 1.17 கோடி மதிப்பில் 21 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி பேசியதாவது:
ஊர் கூடி தேர் இழுப்பது போன்று சில திட்டங்கள் மகிழ்ச்சியை தரக்கூடியது. அதுபோலத்தான் ஏரல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 4.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இது பெண்களுக்கான பள்ளி என்பது மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடியது. ஏனென்றால் பெண்கள் படிப்பது என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு போராட்டமாக இருக்கிறது.
பெற்றோர்கள், பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பாத காலகட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதிதான், ‘பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு நான் உதவித்தொகை தருகிறேன் நீங்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள்,’ என்று கூறி திருமண உதவித்தொகை திட்டத்தினை கொண்டு வந்தார்.
இன்றைக்கு பெண்கள் பள்ளிக்கு செல்கின்ற நிலை வந்தபின்பு அவர்கள் மேலும் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கி ஆதரவுக்கரம் நீட்டக்கூடிய ஆட்சிதான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. அதேபோல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்க இருக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி.
பெண்கள் தங்களது சொந்தக்காலில் நிற்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், பெண்கள் தங்களுடைய தடைகளை எல்லாம், மூடநம்பிக்கைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆட்சிதான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. கிராமப்புறங்களில் இருக்கக்கூடியவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிறிய ஊர்களில்கூட முன்நாள் முதல்வர் கருணாநிதி கல்லூரிகளை கொண்டு வந்தார்.
அவ்வாறு கல்லூரிகளை கொண்டு வந்ததினால்தான், இன்றைக்கு தேசிய கல்வி கொள்கையில் 30 வருடங்கள் கழித்து இந்தியா உயர்கல்வியில் அடையக்கூடிய 50 சதவீத இலக்கினை இன்றே தமிழ்நாடு எட்டியிருக்கிறது. விரைவிலேயே ஏரல் பகுதியில் ஒரு கல்லூரி அமைப்பதற்கு நாங்கள் உங்கள் சார்பிலே முதல்வரிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவோம் என. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.