மழை வெள்ளத்தை கையாளுவதில் தமிழக அரசு தோல்வி: தமிழிசை குற்றச்சாட்டு
மழை வெள்ளத்தை கையாளுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து, அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. ஆனால், அதுதொடர்பாக எந்தவித முன்னெச்சரிக்கையை நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தவில்லை.
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை பார்த்த பிறகும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்து இருக்க வேண்டும். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது. தென் மாவட்டத்தை மாற்றான் தாய் மணப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
தென் மாவட்டங்களில் ஆறு மற்றும் குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை. மழை நீரை சேமிக்க எந்த முயற்சி மேற்கொண்டார்கள் என தெரியவில்லை. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.
சென்னையை இவர்கள் மீட்டெடுக்கவில்லை. மக்கள் தானாக மீண்டெழுந்தார்கள். அதேபோன்று இங்கு மக்கள் தானாக மீண்டு வருவார்கள். அரசாங்க உதவியோடு மக்கள் மீண்டு எழவில்லை என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.