தென் ஆப்ரிக்காவில் உயிரிழந்த தூத்துக்குடி பொறியாளர்: இறப்பில் மர்மம் இருப்பதாக புகார்
தென் ஆப்ரிக்காவில் உயிரிழந்த தூத்துக்குடி கணினி பொறியாளர் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ராஜேஷ்குமார் (வயது 24). சாப்ட்வெர் என்ஜினீயரான இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்க அருகே உள்ள ஷெஷல் தீவு பகுதிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து லைப் டெக் பிரைவேட் லிமிடெட் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சென்று உள்ளார்
இந்தநிலையில், ராஜேஷ்குமார் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, ராஜேஷ் குமார் மற்றும் சிலர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடல் பகுதிக்கு சுற்றுலா சென்றதாகவும், அதில் ராஜேஷ் குமார் மற்றும் சிலர் கடல் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர்கள் தெரிவித்த தகவல் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக இருந்துள்ளது. மேலும், உயிரிழந்த ராஜேஷ்குமாரின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வர பத்து லட்ச ரூபாய் வரை செலவாகும் எனவும் அவர்கள் கூறி உள்ளனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார் குடும்பத்தினர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், ராஜேஷ்குமார் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற தகவல் தங்களுக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ராஜேஷ்குமாரின் நிலை அறிந்து தெரிவிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜேஷ்குமார் ஒருவேளை உயிரிழந்து இருந்தால் அவரது உடலை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.