தூத்துக்குடி சிவன் கோயிலில் பணியாளர்கள் திடீர் தர்னா போராட்டம்

தூத்துக்குடி சிவன் கோயில் கணக்கரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருக்கோயில் பணியாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-23 14:39 GMT

தூத்துக்குடி சிவன் கோயிலில் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சிவன் கோயில் என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் கணக்கராக சுப்பையா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

கணக்கர் சுப்பையா கடந்த 21 ஆம் தேதி கோயில் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து பிரேம்குமார் என்பவர் சிவன் கோயிலில் வைத்து நடைபெற்ற திருமணத்துக்கான சான்றிதழ் கேட்டு சுப்பையாவிடம் தகராறு செய்ததுடன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக சுப்பையா மற்றும் திருக்கோயில் சார்பில் மத்தியபாகம் காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட பிரேம்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரேம்குமாரை கைது செய்த மத்திய பாகம் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த பிரேம்குமார் மீண்டும் சிவன் கோயில் இன்று அலுவலகம் சென்று சுப்பையா மற்றும் கோயில் பெண் ஊழியர்களை மிரட்டியதுடன் ஆபாச வார்த்தைகளால் திட்டினாராம். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோவை மத்திய பாகம் காவல் நிலையத்தில் கொடுத்து மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருக்கோயில் பணியாளர்கள் சுமார் 80 பேர் இன்று தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகக் கூறியும், கோயில் நிர்வாக அதிகாரி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருக்கோயிலில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயில் ஊழியரை மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பிரேம்குமாரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் சிவன் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட திருக்கோயில் பணியாளர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News