தூத்துக்குடி கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் சந்திப்பு
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தவர்கள் ஒன்றாக சந்தித்தனர்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி கடந்த 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மகளிர் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்று கல்லூரியில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் உள்ளிட்டோரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம், கல்லூரி செயலாளர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் இந்த கல்லூரியில் படித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மலரும் நினைவுகளை தன்னுடன் பிடித்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கல்லூரி துவங்கிய 1973 ஆம் ஆண்டு பயின்ற மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தற்போது 2024 ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தினர்.
இந்த மாணவிகள் சந்திப்பு கலந்து கொண்ட மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்று தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் முன்னாள் மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், சக தோழிகளை பார்த்ததும் அவர்களிடம் பழகியதும் கல்லூரி கால நினைவு நினைவை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.