தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் ஆலை அறிக்கை
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் ஆலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதிக்க வேண்டும் என ஆலை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசு மூலம் கழிவுகளை அகற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இதைத்தொடரந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் மற்றும் ஆலையில் உள்ள பசுமை வளையம் பராமரிப்புகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் டிஎஸ்பி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கழிவுகளை அகற்றும் பணி கண்காணிப்பு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும் என்றும் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கழிவுகள் அகற்றும் பணியின் போது 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் வாரம் ஒருமுறை ஆலையில் எவ்வளவு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது தொடர்பான அறிக்கை பெறப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற அனுமதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தொடர்பாக ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையில் சில பராமரிப்புப் பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். இதன் மூலம், உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்தவும், தூத்துக்குடியைச் சேர்ந்த சிலருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் பாக்கியம் கிடைக்கும்.
தூத்துக்குடி மற்றும் இந்திய மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய உரிய ஆதரவும் முடிவும் எடுக்கப்படும் என்று அரசுக்கு நாங்கள் நன்றி கூறுவதுடன் நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.