ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் அகற்றும் விவகாரம்: தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

உச்சநீதிமன்ற ஆணைப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.;

Update: 2023-06-02 12:10 GMT

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என ஒரு தரப்பினும், ஆலையை அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதிக்க வேண்டும் என ஆலை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசு மூலம் கழிவுகளை அகற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் மற்றும் ஆலையில் உள்ள பசுமை வளையம் பராமரிப்புகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் டிஎஸ்பி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கழிவுகளை அகற்றும் பணி கண்காணிப்பு செய்யப்படும். இதில் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த இருவர் இருப்பார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும். இந்தக் கழிவுகள் எவ்வளவு காலத்தில் அகற்றப்படும் எத்தனை வாகனங்கள் தேவைப்படும் எவ்வளவு தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இந்த பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

கழிவுகள் வெளியேற்றும் பணிகளுக்காக ஆலையில் உள்ள தொழிலாளர்கள் செல்லும் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு அந்த கேட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு. 24 மணி நேரம் கண்காணிக்கப்படும். இந்த கழிவுகள் அகற்றும் பணியின் போது 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாரம் ஒருமுறை ஆலையில் எவ்வளவு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கண்காணிப்பு குழு அளிக்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணை ஆட்சியர் கௌரவ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாத்திமா பாபு உள்ளிட்ட 12 பேர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News