தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து, இதுவரை 45 ஆயிரம் டன் ஜிப்சம் வெளியேற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை, 45 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சம் வெளியேற்றப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.;

Update: 2023-08-14 10:17 GMT

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையெடுத்து, ஸ்டெர்லைட் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்றும் நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆலையை திறக்க வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சங்கள் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சி சி டிவி கேமரா கண்காணிப்பு மூலம் கண்காணிக்கபட்டு லாரிகள் மூலம் ஆலையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பின்படி ஜிப்சம் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒரு முறை கண்காணிப்பு குழு எவ்வளவு ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது என்பதை கண்காணித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் 1.65 மில்லியன் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்தது. இதுவரை சுமார் 45,000 மெட்ரிக் டன் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஆலை சுற்றியுள்ள பசுமை வளையம் பராமரிக்கப்பட்டு வருவதுடன் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஸ்லேஜ் கழிவுகள் நிலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது என, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Similar News