இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-03-20 14:35 GMT

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்.

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதேபோல, இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்கு சொந்தமான ஆதேஷ் என்ற ரோந்து கப்பல் நேற்று மாலை கன்னியாகுமரி கடல் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, இலங்கை கடற்பகுதியில் இருந்து 50 கடல் மைல் கடந்து சர்வதேச கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஒரு படகு நுழைந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அத்துமீறி நுழைந்த படகை கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்தனர். அது, இலங்கையைச் சேர்ந்த ஒரு மீன்பிடி படகு என தெரியவந்தது. உடனே, கடலோர காவல் படையினர் அந்தப் படகில் இறங்கி சோதனை செய்தனர்.

அதில் இலங்கை பெருவளை பகுதியைச் சேர்ந்த முகமது, ரூவான், பிரகித், மதுரங், அப்துல், ரகுமான் என ஆறு மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதையெடுத்து அவர்களை கைது செய்த கடலோர காவல் படையினர் இன்று மாலை தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் வந்த படகை கொண்டு வந்து தருவைக்குளத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்த இலங்கை மீனவர்கள் காற்றின் வேகத்தால் வழி தவறி வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் கடத்தலில் ஈடுபட வந்தார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News