தூத்துக்குடியில் மீனவப் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி
தூத்துக்குடியில் மீனவப் பெண்களுக்கு செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலை சீர்செய்தல் குறித்த ஒருவார உள்வளாகப் பயிற்சி நடைபெற்றது.;
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது சென்னை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியுதவியுடன் 'மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலைசீர் செய்தல் பற்றிய பயிற்சி” என்ற ஒருவாரகால உள்வளாகப் பயிற்சியை நடத்தியது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் இந்த பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அகிலன் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்ற மீனவப் பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, மீன்பிடித் தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும் இந்தப் பயிற்சியானது மீனவப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் எனவும் எடுத்துரைத்தார்.
மேலும், மதிப்பூட்டிய மீன் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்துதல் மூலம் மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் குறித்து அவர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜய நிர்மலா, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்ரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா உள்ளிட்டோர் நிறைவுவிழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெற்ற தருவைகுளம் மற்றும் பழையகாயல் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பெண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரை வழங்கினார். மீன்வளக் கல்லூரி பேராசிரியர்கள் அந்தோணி மிக்கேல் பிரகாகர், மௌலின் சந்திரா, முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் அமலஷஜீவா, . எமிமா, தினேஷ்குமார் மற்றும் வீரமணி ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.