தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த தூத்துக்குடி மாணவருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் தண்ணீரில் மிதந்து சாதனை நிகழ்த்திய மாணவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-06-13 13:12 GMT

சாதனை படைத்த மாணவர் ஹர்சனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஹர்சன் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்றுள்ள இவர், நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீச்சல் குளத்தில் அதிக நேரம் மிதப்பதற்கான உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில் நீச்சல் குளத்தில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. மாணவன் ஹர்சன் காலை 10 மணி முதல் தொடர்ந்து மிதப்பதற்கான உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

மாணவர் ஹர்சன் நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தொடர்ந்து மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவன சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சாதனை முடித்து வெளியே வந்த சிறுவனை பெற்றோர் பயிற்சியாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து சாதனை படைத்த சிறுவன் ஹர்சனை பாராட்டி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதுவரை தொடர்ந்து 6 மணி நேரம் தண்ணீரில் மிதப்பது சாதனையாக இருந்த நிலையில், தற்போது மாணவர் ஹர்சன் 7 மணி நேரம் 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்துள்ளதாகவும், மாணவர்களிடையே நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனையை மாணவர் ஹர்சன் நிகழ்ச்சி உள்ளதாகவும் அவரது பயிற்சியாளர் புஷ்பராஜ் தெரிவித்தார்.

நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர் ஹர்சனை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார். சாதனை நிகழ்த்திய மாணவரை பாராட்டிய எஸ்.பி. பாலாஜி சரவணன் அவர் மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.

நிகழ்வின் போது கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமி பயிற்சியாளர் புஷ்பராஜ் மற்றும் சாதனை படைத்த மாணவரின் பெற்றோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News