விளாத்திகுளம் அருகே ராணுவ வீரர் கொலை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

விளாத்திகுளம் அருகே ராணுவ வீரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-17 12:07 GMT

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். (25). இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து ஒரு மாத விடுப்பில் தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வேல்முருகன் வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு ராணுவ வீரர் வேல் முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராணுவ வீரரை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதனால், கிராம மக்கள் ஏராளமானோர் வேல்முருகன் வீட்டில் திரண்டனர்.

ராணுவ வீரர் வேல்முருகன் கொலை தொடர்பாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை நிகழ்ந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

மேலும், இந்த கொலை தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெம்பூர் பகுதியில் மேலும் பிரச்னை ஏதும் நிகழாமல் இருக்க அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

ராணுவ வீரர் வேல்முருகன் கொலை வழக்கு சம்மந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழக்கின் புலன் விசாரணையை பாதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News