தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1098 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 1098 இடங்களில் இருந்த ஜாதிய அடையாங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
குடிநீர் தொட்டியில் இருந்த ஜாதிய அடையாளம் அழிப்பு.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி உட்கோட்டத்தில் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலாயுதபுரம் மற்றும் முத்தையாபுரம் பகுதியில் 2 மின்கம்பங்களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் 3 மின் கம்பங்களிலும் இருந்த ஜாதிய அடையாளங்கள் பொதுமக்களால் அழிக்கப்பட்டது.
மேலும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்விளை, வன்னிமாநகரம், ராணிமகாராஜபுரம், அடைக்காலபுரம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோப்பூர், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர், அம்பேத்கர்நகர், காமராஜபுரம், ராஜமணியாபுரம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர், பிள்ளையார்நகர், முக்காணி, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்காளியம்மன் கோவில் தெரு, காமராஜர் நகர் வடக்கூர், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் உள்ள 150 மின் கம்பங்கள், 9 மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள், 9 குடிநீர் தெருகுழாய்கள், 10 பொது சுவர்கள், 2 பேருந்து நிறுத்தம், 8 நெடுஞ்சாலைதுறை அடையாள பலகை என 188 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்டார்குளம், வி. கோவில்பத்து, விட்டிலாபுரம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர், அண்ணாநகர், ஆழ்வார்திருநகரி, குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானாவிளை, முத்துமாலைவிளை, அம்மன்புரம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூளைவாய்க்கால், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர்நகர், சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னார்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 149 மின் கம்பங்கள், ஒரு மின்வாரிய டிரான்ஸ்பார்மர், நான்கு நீர்தேக்கதொட்டி, ஒரு தெருக்குழாய், 5 பொது சுவர்கள், ஒரு பேருந்து நிறுத்தம், ஒரு பாலம் என 162 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
மணியாச்சி உட்கோட்டத்தில் நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே. சைலாசபுரம், பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மங்கலம், மேல மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 மின் கம்பங்கள், ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 3 குடிநீர் தெருகுழாய், ஒரு நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை, ஒரு பாலம், ஒரு பேருந்து நிறுத்தம் என 28 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூப்பன்பட்டி, மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனேரி, கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலந்தைப்பட்டி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குமீண்டான்பட்டி, கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டதெற்கு கழுகுமலை, கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானங்காத்தான் ஆகிய பகுதிகளில் உள்ள 80 மின் கம்பங்கள், மூன்று மேல் நிலை நீர்தேக்க தொட்டி, இரண்டு பொது சுவர், 6 பாலம் என 91 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
சாத்தான்குளம் உட்கோட்டத்தில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுதந்திர நகர், நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிப்பன்குளம் காலனி, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டார்மடம் பஜார், தாமரைமொழி, நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 35 மின் கம்பங்கள், 5 மேல் நிலை நீர்தேக்க தொட்டி, 6 குடிநீர் தெருகுழாய்கள், 6 பொது சுவர்கள், 8 நெடுஞ்சாலைத்துறை அடையாளப் பலகை, 3 பேருந்து நிறுத்தம் என 63 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 537 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மொத்தம் 1098 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களுக்கும், காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.