தூத்துக்குடி மாநகரில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு: மேயர் தகவல்
தூத்துக்குடி மாநகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுவரை இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்பட்டுள்ளன என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.;
தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை தேசிய பசுமை படை சார்பில், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் மாநகர பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ மாணவிகள் பங்கேற்று ஓவியங்களை வரைந்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று ஏபிசிவி மெட்ரிக்குலேசன் பள்ளியில் வைத்து நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தூத்துக்குடி மாநகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் மற்றும் கருணாநிதி பிறந்த நாள் என இதுவரை சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகரம் விரைவில் காற்று மாசுபாடு இல்லாத மாநகரமாக உருவாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. குப்பைகளை அகற்ற தூத்துக்குடி மாநகர பகுதியில் நாள்தோறும் சுமார் 180 டன் கழிவுகள் அகற்றப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகள் விவசாயிகளுக்கு உரமாகவும் மக்காத குப்பைகள் பாலிதீன் பைகள் ஆகியவை மறுசுழற்சி முறையில் நிலத்தில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இளம் தலை முறையினரான மாணவர்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரங்களை வளர்த்து மாநகராட்சிக்கு தெரிவித்தால் அதை தண்ணீர் ஊற்றி பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.