‘புகையிலை இல்லா கல்வி நிறுவனம்’ சான்றிதழ் பெற தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில், புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்கிற சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், புகையிலை தடைச் சட்ட அமலாக்கப் பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (கோவில்பட்டி) ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:
தேசிய புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகளை மாவட்ட அளவில் அமல்படுத்திட விரைவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய புகையிலை தடை சட்டம் 2003-ன்படி, மருத்துவ நிலையங்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பொது நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், புகைவண்டி நிலையம், திரை அரங்குகள், பணி புரியும் இடங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலக பொது இடங்களில் யாரும் புகைபிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்குட்பட்ட நபர்களிடம் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் புகையிலைப் பொருட்களை காட்சிப்படுத்துதல் தடை செய்யப்பட்டது. “புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி” மற்றும் 18 வயதுக்குட்பட் நபர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இல்லை” ஆகிய பதாகைகளை சுகாதாரத் துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி காட்சிப்படுத்துதல் வேண்டும்.
புகையிலைப் பொருட்கள் குறித்து விளம்பரப் பலகை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் யாரும் புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
புகையிலை தடை சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவில், வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டு குழு உறுப்பினர்களால் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள் முறையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் புகையிலை தடை சட்ட விதிகளை அமல்படுத்தி புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்கிற சான்றிதழ் பெற பொது சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.