தூத்துக்குடியில் விசாரணைக்கு வந்தவரை தாக்கிய எஸ்.ஐ. பணியிட மாற்றம்

காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவரை தாக்கியதாக சூரங்குடி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

Update: 2023-06-09 09:05 GMT

உதவி ஆய்வாளர் சுந்தரம்.

காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவரை தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சூரங்குடி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சுந்தரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள எம்.சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகு முருகேசன் என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக புகார் மனு சூரங்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனு தொடர்பாக சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் 08-06-2023 சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. விசாரணைக்காக அழகு முருகேசனுன் அவரது சகோதரர் ராஜகனி என்பவரும் சென்றுள்ளார்.

விசாரணையின் போது காவல் உதவி ஆய்வாளர் சுந்தரத்திற்கும், ராஜகனிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் ராஜகனியை கீழே தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.


இதில் காயமடைந்த ராஜகனி தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ராஜகனியின் உறவினர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சுந்தரத்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தாக்கிய சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News