உரிமம் இல்லாமல் பட்டாசுகளை தேக்கி வைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி பட்டாசுகளையும் பதுக்கி வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் பட்டாசு விபத்துகளால் கடந்த சில நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தீப்பெட்டி ஆலைகள் வெடிபொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 184 பட்டாசு கடைகள் உள்ளன. அதேபோன்று 164 தீப்பெட்டி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் உற்பத்தி ஆலை உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, பாதுகாப்பாக எந்தவித விபத்தும் இல்லாமல் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து தொழிலை முறையாக நடத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்துகள் பகிரப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் காவல்துறையினர் வட்டாட்சியர்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:
மாவட்டத்தில் வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு கடை நடத்துவோர் மற்றும் தீப்பெட்டிஆலை நடத்துவோர் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கையாள வேண்டும். விபத்து ஏற்படாமல் முறையாக பாதுகாப்பு உபகரணங்களை வைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை தயாரிக்க வேண்டும்.
மேலும், விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வெடிபொருள் அல்லது மூலப் பொருட்களையோ மற்றும் தீபாவளி போன்ற காலங்களில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை அதிக அளவு அனுமதி பெறாத பகுதிகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தேக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.