தூத்துக்குடி மாவட்டத்தில் 50 இடங்களில் மலிவு விலையில் காய்கனிகள் விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 50 இடங்களில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

Update: 2023-12-21 14:26 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 50 இடங்களில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டு அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் அபூர்வா தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் சுப்பிரமணியம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் பிருந்தாதேவி ஆகியோர் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய 50 இடங்களில் கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கனிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர், தென்காசி, மதுரை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 50 உதவி தோட்டக்கலை அலுவலர்கள், 50 உதவி வேளாண்மை அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இரண்டு நாட்களில் 19 டன் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்ததன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News