Safety Measures Of Rainy Season Disease மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள துாத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்
Safety Measures Of Rainy Season Disease சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
Safety Measures Of Rainy Season Disease
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலங்களில் நீரின் மூலம் பரவும் நோய்களான வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு, இருமல் மற்றும் கொசுக்கள் மூலமும் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, விலங்குகள் மூலம் பரவும் நோய்களான எலிக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுத்திட தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு தயாரித்த உடனே உண்ண வேண்டும். சேமித்து வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் உணவு மற்றும் நீரின் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கினால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டவுடன் உப்பு சர்க்கரை கரைசல் அருந்த வேண்டும். தங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய பயன்படுத்தாத, தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் தண்ணீர் தேங்குவதை தடுத்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் தடுப்பதினால் கொசுக்களினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் ஆதாரங்களான தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் உள்ள உறைகிணறுகள் அனைத்தும் பிளிச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்யப்ப்டடு தொற்றுநோய் பரவாமல் தடுக்க குளோரினேசன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய பயன்படுத்தாத, தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உள்ளதா என ஆய்வு செய்து, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை களப்பணியாளர்களால் அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும், மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மழைக்கால நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டு கொண்டுள்ளார்.