குலசை தசரா விழாவில் தற்காலிக கடை வியாபாரிகளுக்கான விதிமுறைகள்!

குலசை தசரா விழாவில், தற்காலிக கடை அமைத்துள்ள வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து, அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-23 06:13 GMT

குலசை தசரா விழாவில், தற்காலிக கடை வியாபாரிகளுக்கான நிபந்தனைகளை வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை (மாதிரி படம்)

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 107 உணவு வணிகர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிக நிறமி சேர்க்கப்பட்ட 5 கிலோ சிக்கன், ஒரு கிலோ பச்சைப் பட்டாணி, இரண்டு கிலோ வடை உள்ளிட்ட 21 கிலோ சட்டத்திற்குப் புறம்பான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், அச்சிட்ட காகிதங்களைப் பொட்டலமிடப் பயன்படுத்திய 6 கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய்க்கும் குறைவில்லாமல் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருவிழா காலத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானக்கூடங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 -இன் கீழ் தங்களது வணிகத்திற்கு உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கான இணையத்தளம்: https://foscos.fssai.gov.in ஆகும். விண்ணப்பித்தவுடன் விரைவில் தங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

சாப்பாடு போன்ற உடனே உண்ணக்கூடிய உணவு வகைகளை, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களாக மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் தரம் குறித்து சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு, உள்ளீட்டுப் பொருட்கள், ஊட்டச்சத்து விபரம், உணவு பாதுகாப்பு உரிம எண் ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற எவ்விதமான காலாவதியான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணம் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் டைஃபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவு பெற்ற நிறுவனங்களில் அல்லது அன்னதானங்களில் மட்டுமே பொதுமக்கள் உணவு உண்ணவும் அல்லது உணவுப் பொட்டலங்களை வாங்கவும் வேண்டும் எனவும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களானது, உண்ணத் தகுந்த காலத்திற்குள் இருந்து, போதிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.

வணிகர்களும், அன்னதானங்கள் நடத்துபவர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News