தூத்துக்குடி அருகே கிராம மக்கள் திடீர் மறியல்: போலீசார் குவிப்பு
தூத்துக்குடி அருகே பூமி பூஜை செய்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள முப்பிலிவெட்டியில் ஏற்கெனவே இருந்த சமுதாய நலக்கூடம் கட்டிடமானது பழுதாகி மிகுந்த மோசமான நிலையில் இருந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பாக திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பழைய பள்ளி கட்டிடம் அருகில் உள்ள காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் திருமண மண்டப பணிகள் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. மேலும், தற்போது மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தாட்கோ நிதி உதவியுடன் 2 கோடி செலவில் 13 சென்ட் நிலத்தில் திருமண மண்டபம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமண மண்டபம் அமைப்பதற்காக ஊர் பொதுமக்கள் பூமி பூஜை செய்த இடத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியின் சமையலறை கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி அருகே சமையலறை கட்டிடம் கட்டுவதற்கு போதுமான இடம் இருப்பதாகவும் எனவே திருமணம் மண்டபத்திற்கு பூமி பூஜை செய்த இடத்தில் மீண்டும் திருமண மண்டபம் அமைக்க வேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறனர்.
இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், பூமிபூஜை செய்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓட்டப்பிடாரம் - புதியம்புத்தூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து, அங்கு சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ஓட்டப்பிடாரம் சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்தனர். மேலும், காவல்துணை கண்காணிப்பாளர்கள் சம்பத், வெங்கடேசன் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.