ஆழ்கடல் பகுதியில் மோதல் அபாயம்: மீனவர்கள் ஆட்சியருக்கு கோரிக்கை

தூத்துக்குடி மீனவர்கள் இடையே ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-11-20 13:06 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மீனவர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இதில், தூத்துக்குடி பகுதி விசைப்படகு மீனவர்கள் மட்டும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும் என விதிமுறை உள்ளது. மற்ற மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. இதற்கிடையே, ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மீனவர்களுக்கும், தருவைக்குளம் பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை ஆழ்கடல் பகுதியில் 13 கடல் மைல் தொலைவில் மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசும் போது அங்கே வந்த திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இந்தப் பகுதியில் தருவைகுளம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது எனக் கூறி அவர்களை விரட்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தருவைகுளம் பகுதி நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஆழ்கடலில் மீனவர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்துள்ள மனுவில், ஆழ்கடல் மீன்பிடிப்பதில் ஏற்படும் மோதல் போக்கு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி நாட்டுப் படகு மீனவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News