கிராம சபை கூட்டத்தில் 9 தெருக்களின் ஜாதி பெயர்களை மாற்றி தீர்மானம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ஜாதி பெயரில் உள்ள 9 தெருக்களின் பெயர்களை மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், மேலஆத்தூர் ஊராட்சியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி ஜாதி பெயரில் உள்ள 9 தெருக்களின் பெயர்களை மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில ஜாதிகளின் பெயரில் உள்ள தெருக்களுக்கு தலைவர்களின் பெயர்கள், அப்துல்கலாம் போன்ற அறிவியலாளர்கள் பெயர்களை வைக்கலாம். நாங்குநேரியில் ஒரு தர்மசங்கடமான செயல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரும் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
நமது நாட்டில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு ஜாதிகளை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர்கள் நம்மை ஒரு இந்தியராகத்தான் பார்ப்பார்கள். நமது ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவற்றை சேர்த்துதான் ஒரு பொருளை தூக்க முடியும். அனைவரும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
உங்கள் கிராமங்களுக்கு ஜாதி பெயர்களை நீக்கிவிட்டு சுதந்திரப்போராட்ட வீரர்களின் பெயரை சூட்டினால் தமிழ்நாட்டிற்கே மேலஆத்தூர் ஊராட்சி முன்னுதாரணமாக திகழும். தெற்கு ஆத்தூர் நாடார் தெரு காமராஜர் தெருவாகவும், பம்பையாநகர் காமராஜர் தெற்கு தெருவாகவும், தெற்கு ஆத்தூர் தேவர் தெரு பசும்பொன் தெருவாகவும், சேனையர் தெரு ஸ்ரீஉச்சினிமாளி அம்மன் கோவில் தெருவாகவும், யாதவர் தெரு சடைச்சி அம்மன் கோவில் தெருவாகவும், பரதர்தெரு கொறுவநல்லூர் கித்தேரியம்மான் கோவில் தெருவாகவும், கொறுவநல்லூர் நாடார் தெரு காமராஜர்நகராகவும் கொறுவநல்லூர் எஸ்.சி. தெரு டாக்டர் அம்பேத்கார் நகராகவும், கொறுவநல்லூர் தேவர்தெரு நேதாஜிநகராகவும் மாற்றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பெயர்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.