தூத்துக்குடியில் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்பது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது.

Update: 2023-10-12 14:13 GMT

தூத்துக்குடியில் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் ஒத்திகையில் பங்கேற்றோர்.

மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடல் வழியை பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது, தீவிரவாதிகள் வேடத்தில் இருக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் மாறுவேடத்தில் கடல் வழியாக நிலப்பரப்பில் ஊடுருவது போன்றும் அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்வது போலவும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரவாதிகள் கடற்பகுதி மூலமாக மாவட்டத்திற்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் பொருட்டும், கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாகவும் அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவீரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி கைது செய்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ‘சாகர் காவாச்” என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

.இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கடல் வழியாக 6 தீவிரவாதிகள் ஊடுருவி புதிய துறைமுகம் முகத்துவாரத்தில் உள்ள அலுவலகத்தை கைப்பற்றி அங்கு பணியில் இருந்த 4 ஊழியர்களை பணய கைதிகளாக பிடித்து இருப்பதை பாதுகாப்பாக மீட்பது சம்மந்தமான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பளார் அதிவீரபாண்டியன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ் குமார், கடலோர பாதுகாப்பு குழுமம் தூத்துக்குடி மண்டல காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News