ஜெயிலர் படத்தை உற்சாகமாக வரவேற்ற தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.;
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகிய ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷெரப், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி, நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
ஜெயிலர் படம் வெளியீட்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் தியரங்குகளில் பல்வேறு விதமாக கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.
தூத்துக்குடியில் உள்ள பிரதான திரையங்குகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள போதிலும், தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரு வேனில் 50 கிலோ மீட்டர் தொலைவில் நெல்லையில் உள்ள முத்துராம் திரையரங்கிற்கு சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வெளியாகும் நாள் தான் தங்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் திருநாள் போல் வெகு சிறப்பாக கொண்டாடுவோம் என்றும் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதை முன்னிட்டு, திரையரங்க வாயிலில் திரண்ட ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் ரசிகர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டடினர். மேலும் திரையரங்க வாயில் பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க ஜெயிலர் திரைப்பட வெளியீட்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரியில் உள்ள தங்கம் திரையரங்கில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்த ரசிகர்கள் நடிகர் ரஜினியின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் மலர் தூவியும் கொண்டினர்.
மேலும், ரஜினியின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ரஜினிகாந்த் கட்-அவுடிற்கு பாலாபிஷேகம் செய்து மலர் தூவி உற்சாக நடனத்துடன் கொண்டாடினர். ஜெயிலர் படத்தில் வரும் " உன் அப்பன் அலும்ப பார்த்தவன், உன் மொவனையும் பேரனையும் ஆட்டம் போட வைப்பான்" எனும் வரிகளுக்கு ஏற்ப அனைவரது நடனமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.