தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த மழைநீர்
கனமழை காரணமாக தூத்துக்குடிமருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை தண்ணீர் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.;
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கன மழை காரணமாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடைய, தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை, வஉசி சாலை, கடற்கரை சாலை, லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், நிகிலேஷ் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது சில வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது.
மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான வாயிலில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், தண்ணீர் தேங்கியுள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை மருத்துவமனை டீன் சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் மருத்துவமனையிலேயே மருந்து, மாத்திரைகளை வாங்குமாறும் மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.