தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த மழை: சில மணி நேரத்தில் வடிந்த தேங்கிய தண்ணீர்

தூத்துக்குடி மாநகரில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இருப்பினும், சில மணி நேரத்தில் தண்ணீர் வடிந்ததால் பொதுமக்கள் பெருமூச்சு விட்டனர்.

Update: 2023-09-03 01:07 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

கனமழை காரணமாக தூத்துக்குடி மரக்குடி தெரு, தற்காலிக பேருந்து நிலையம், சின்ன கோவில், பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த மழை நீரில் சென்ற இருசக்கர வாகனங்கள் பழுதாகி வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி வாகனத்தை உருட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும் சாலைகளில் தேங்கிய மழை நீரின் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர் இதையடுத்து மாநகராட்சி சார்பில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாரிகள் மூலம் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது. இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். சுமார் நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வடிந்தன. மழைநீர் தேங்கியபோது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போதிலும், தேங்கிய தண்ணீர் சில மணி நேரத்தில் வடிகால் மூலம் வெளியேறியதால் மக்கள் பெருமூச்சு விட்டனர்.

மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த மழையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆணையர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் போது கடந்த காலங்களில் மழை நீரினால் மிகவும் பாதிப்படைந்த பழைய மாநகராட்சி அலுவலகம், பிரையன்ட் நகர், அம்பேத்கார் நகர், எஸ்கேஎஸ்ஆர் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ராஜீவ் நகர் போன்ற அநேக பகுதிகளில் மின் மோட்டர் இல்லாமல் புதிதாக கட்டிய வடிகால்களில் வாட்டத்தில் நீர் செல்வதால் அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், தற்பொழுது நீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக நீரானது அப்புறப்படுத்தப்பட்டும் சாலை ஓரங்களில் உள்ள கேட்ச் பிட்ஸ்ல் நீர் செல்வதற்கு வழி செய்யப்பட்டும் வருகிறது, வருங்காலங்களில் இதற்கும் தீர்வுகள் காணப்படும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

அப்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News