இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: துரை வைகோ பேட்டி!

இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-27 14:30 GMT

தூத்துக்குடியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டியளித்தார்.

தூத்துக்குடியில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி இல்ல திருமண விழாவில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீச்சு சம்பவம் தவறான சம்பவம். கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அதற்காக வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. குண்டு வீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதரீதியாக ஜாதி ரீதியாக சர்ச்சைகள் கிளம்போது தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சில இளைஞர்கள் உணர்ச்சிவசப் பட்டு சில சம்பவங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை தமிழக அரசு மதிக்கவில்லை என்று கூறுவது தவறானது. ஆளுநர் தனது உரையில் சட்டசபையில் காமராஜர் பெயரை கூட விட்டுவிட்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல் இப்படித்தான் இருக்கிறது.

அரசியல் அமைப்பு சாசன சட்டத்தில் கூறியுள்ள கடமைகளின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் உதாரணமாக டிஎன்பிசி தலைவராக சைலேந்திரபாபு பதவி ஏற்க ஆளுநர் இடைஞ்சலாக இருந்து வருகிறார். சைலேந்திர பாபு எப்படிப்பட்ட அதிகாரி என்பது மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட நபருக்கு இந்த பொறுப்பிற்கு வந்தால் துறை நன்றாக செயல்படும் என்று அரசு முடிவு எடுத்து வழங்க இருந்தது. அதற்கு ஆளுநர் தடையாக இருந்து வருகிறார்.

இந்தியா கூட்டணி ஐந்து மாநில தேர்தல் மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும். பாரத் என்று கொண்டு வருவது திசை திருப்பும் முயற்சி. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்தியா கூட்டணியின் இலக்கு யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் எங்களது இயக்கம் சார்பில் ராகுல் காந்தியை தான் பிரதமராக கூறுவோம்.

எனக்கு தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை. மேலும், கட்சித் தலைமை இயக்க தோழர்கள் அந்த நேரத்தில் முடிவு எடுக்கும் பட்சத்தில் போட்டியிடுவேன் என துரை வைகோ தெரிவித்தார்.

Tags:    

Similar News