தூத்துக்குடி கிரேன் ஆபரேட்டர் உயிரிழப்பிற்கு நிவாரணம் கேட்டு போராட்டம்
தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கிரேன் ஆபரேட்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பனாமா நாட்டில் உள்ள கியானா கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. அதனை, எஸ்தோ லேபர் காண்ட்ராக்ட் மூலமாக, தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மீனவர் காலனி பகுதியை சேர்ந்த பாரத் (40) என்பவர் நேற்று கப்பலில் உள்ள கிரேன் மூலமாக லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென, கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே விழுந்துள்ளது. பின்னர் உடனடியாக மற்றொரு கிரேன் மூலமாக பாரத் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது. பின்னர், சக ஊழியர்கள் மீட்டு வ.உ.சி துறைமுக ஆம்புலன்ஸ் மூலமாக வ.உ.சி. துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, தெர்மல் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், உயிரிழந்த பாரத் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த பாரத்துக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து, சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, ஒரு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி சென்றிந்த கனிமொழி எம்.பி. உடனடியாக மீனவர் காலனியில், விபத்தில் இறந்த கிரேன் ஆப்ரேட்டரின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, கப்பல் நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரணம் வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். கனிமொழி எம்.பி.யுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.