தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சப் கலெக்டர் விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவர், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த 9.9.2022 அன்று திருமணம் நடந்துள்ளது. முதுநிலை பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுஜாதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கணேஷ் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனி அறையில் படுத்திருந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போடாததை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வீட்டை தட்டி உள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டின் வெளியறையில் படுத்து இருந்த கணேஷ் எழுந்து உள்ளே உள்ள அறையில் படுத்து இருந்த சுஜாதாவை கதவைத் தட்டி எழுப்ப முயன்றுள்ளார்.
ஆனால், கதவு திறக்காததை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள நிலை கம்பில் சேலையில் தூக்கு போட்டு சுஜாதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தென்பாகம் காவல்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஆசிரியை சுஜாதா தற்கொலை தொடர்பாக அவரது கணவர் கணேசிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி விரைந்தனர். அவர்களிடம் தூத்துக்குடி சப் கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.