தூத்துக்குடியில் நிலத்தடி நீரை திருடும் தனியார் தொழிற்சாலைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீரை திருடும் தனியார் தொழிற்சாலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2023-08-13 13:58 GMT

சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில தனியார் தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை திருடுவதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் விடுத்துள்ள கோரிக்கை விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் வட்டம், ஶ்ரீவைகுண்டம் வட்டம் மற்றும் தூத்துக்குடி வட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன் பெறாத கல் குவாரிகளில் தேங்கியிருக்கின்ற தண்ணீரை நாள்தோறும் இரு நூற்றுக்கும் மேலான டேங்கர் லாரிகளில் எடுத்து தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன

ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் உட்புறமிருந்து 20 எம்ஜிடி திட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுத்து வந்த நிலையில், இந்தாண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சியால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் வழங்க முடியாததால் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், அந்த தொழிற்சாலைகள் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தண்ணீர் கொள்ளையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

தூத்துக்குடி வட்டத்திலுள்ள அல்லிகுளம், முருகன் நகர், வாகைகுளம், தேரிரோடு, விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் வல்லநாடு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் ராட்சத மோட்டார்வைத்து நாள்தோறும் 16 கோடி லிட்டர் தண்ணீர் லாரிகளில் கடத்தப்படுகிறது.

ஶ்ரீவைகுண்டம், அணியாபரணநல்லூர், ஸ்ரீ மூலக்கரை மற்றும் சிவகளை பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரையும் உறிஞ்சு லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது அதிகப்படியான நீரை இந்த தொழிற்சாலைகள் உறிஞ்சுவதால் நீரின் தரமும் குறைந்து போய் தரமற்ற நீராக மாறியுள்ளது.

அதிகப்படியான ஆழத்தில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது வீடுகளில் உள்ள ஆழ்துளை  கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்றி போய்யுள்ளன. வட கிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதத்தில் தான் ஆரம்பிக்கும் அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே நிலத்தடி நீர் முற்றிலும் வற்ற துவங்கி விட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஆகிய மூன்று யூனியன்கள் தவிர மற்ற யூனியன்களில் நிலத்தடி நீர் எடுக்க கூடாது என மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை எல்லாம் கண்டுகொள்ளாமல் தண்ணீர் கொள்ளை நடைபெற்று வருவதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல முடியாது.

தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தண்ணீர் கொள்ளையை தடுத்திட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News