தூத்துக்குடியில் வரும் 25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.;
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து, வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8- ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி, ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்கல்வி படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக் காலியிடங்கள் தொடர்பான விவரங்களை deo.tut.jobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.11.2023 தேதி மாலை 4 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த மின்னஞ்சலில் அனுப்பும் நிறுவனங்களுக்கு CONFIRMATION MAIL அனுப்பப்படும். இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment office என்ற Telegram channel-இல் இணையவும். அதன் உள் நுழைந்து Join என்பதனை click செய்து எளிதில் channel-இல் இணையலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.