பிஎம் கிசான் திட்ட விவசாயிகள் அஞ்சல் துறையில் கணக்கு துவங்க அழைப்பு
பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 15 ஆவது தவணைத் தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கிகணக்கு துவங்க அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உதவுகிறது.;
பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 15 ஆவது தவணைத் தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கிகணக்கு துவங்க அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உதவுகிறது.
தூத்துக்குடி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 15 ஆவது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 1.61 லட்சம் விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3,528 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.
எனவே, விவசாயிகள் அனைவரும் உடனடியாக அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு துவங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.