தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியை மாணவர்களுடன் பெற்றோர் முற்றுகை
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களை நியமனம் செய்யக்கோரி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.,
மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 22 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இங்கு ஆதவா என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 12 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தனர்.
ஆனால், ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் உரிய சம்பளம் வழங்கப்படாததால் 12 ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக பணிக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் உரிய ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என பள்ளி முன்பு கூடி இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து, ஆசிரியர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.