பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா மாட்டு வண்டிப் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது.;

Update: 2023-05-14 08:23 GMT

பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டி.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலய 67 ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சியில் ஆலய விழா குழு சார்பில் இன்று மாட்டு வண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

8 வண்டிகள் கலந்து கொண்ட பெரிய மாட்டு வண்டி போட்டி 10 மைல் தூரம் நடைபெற்றது. இதில், வேலங்குளம் கண்ணன் என்பவரது மாடு முதலிடமும், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாடு இரண்டாமிடமும், குமாரெட்டியாபுரம் மாடு மூன்றாவது இடமும் பிடித்தன.


இரண்டாவதாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி போட்டி ஆறு மைல் தூரம் நடைபெற்றது. இதில், 16 வண்டிகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் என்பவரது வண்டி முதலிடமும், வேலங்குளம் கண்ணன் என்பவர் வண்டி இரண்டாமிடமும் பிடித்தன.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 20 வண்டிகள் கலந்து கொண்டன. ஐந்து மைல் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் ஆதனூர் செல்வம் என்பவரது வண்டி முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தில் பாஞ்சாலங்குறிச்சி பால ஹரிஹரன் என்பவர் மாடு பிடித்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு முதல் பரிசாக 71 ஆயிரமும், சிறிய மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக 51,000 ரூபாயும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக 31,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி போட்டிகளை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

Similar News