தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு முதல் பலி?
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுஇடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் (வயது 54) என்ற தொழிலாளி இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த பார்த்திபனுடன் மேலும் நான்கு பேர் கொரோனா வாடில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்த்திபன் உயிரிழப்பு குறித்த தகவல் பரவியதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு:-
பார்த்திபன் என்ற தொழிலாளி கடந்த மாதம் 21 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருப்பது பரிசோதனைகள் தெரிய வந்தது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பார்த்திபனுக்கு தொடர்ந்து பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
மேலும், அவருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை எடுக்கப்பட்டது. பார்த்திபனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது என மார்ச் 31ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும், பார்ர்த்திபனுக்கு தொடர்ந்து கடுமையான வயிற்று வலி இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆம் தேதி பார்த்திபனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபனுக்கு இருதயம் மற்றும் நுரையீரல் அடைப்பு காரணமாக இன்று காலை 8.10 திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு பல்வேறு கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. காலை 8.40 மணிக்கு பார்த்திபன் இறந்து விட்டார். உயிரிழந்த பார்த்திபன் ஏர்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் ஆவார் என மருத்துவ மனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.