தூத்துக்குடி காதல் தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் காதல் தம்பதி கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் விற்பனை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 02.11.2023 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (23) மற்றும் அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரையும் வீடுபுகுந்து அரிவாளால் தாக்கி கொலை வழக்கில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான பரத் விக்னேஷ்குமார் (25), முத்துராமலிங்கம் (47), தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (23), ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (24), தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி (27) மற்றும் தூத்துக்குடி டைமண்ட் காலனியைச் சேர்ந்த பாரத் சக்கரவர்த்தி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான பரத் விக்னேஷ்குமார், முத்துராமலிங்கம், இசக்கிராஜா, கருப்பசாமி மற்றும் ராஜபாண்டி ஆகிய 5 பேர் கடந்த 03.12.2023 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைதானவர்களில் மற்றொருவரான பாரத் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்பேரில், பாரத் சக்ரவர்த்தி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் கைதான 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 173 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.