வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட மாணவ, மாணவிகள்
உலக சுற்றுலா தினத்தைமுன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்
துமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக, சுற்றுலா இயக்குநர் அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்தப்பட்டது. சுற்றுலாத்தலங்கள், வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு சுற்றுலாவின் நோக்கம் ஆகும்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் 50 மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்கள் ஒரு பேருந்தில் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, மாணவ, மாணவிகளிடையே, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ‘ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கப்பட்டது. விழிப்புணர்வு சுற்றுலாவை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலக உதவி சுற்றுலா அலுவலர் நித்தியகல்யாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டின் மிகப்பழமையான நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்றான ஆதிச்சநல்லூர் பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாணயம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.